ஆளுநர், தலைவர்கள் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆர்.என்.ரவி (தமிழக ஆளுநர்): இந்த நன்னாளில், உலகின் வழிகாட்டியாக பரிணமிக்கவுள்ள நம் தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். ஜி.கே.வாசன் (தமாகா, தலைவர்): கிருஷ்ணன் பிறந்த நாளில் நாட்டில் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருக, மக்கள் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருக, நாடும், நாட்டு மக்களும் அனைத்து துறையிலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்புமணி (பாமக, தலைவர்): கிருஷ்ண பகவான் அவதரித்ததற்கான நோக்கம் உலகில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை பெருக வேண்டும் என்பதுதான்.

 அந்த நோக்கம் நிறைவேறி மக்கள் அனைவரும் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் வாழ்வதை உறுதி செய்ய பாடுபடுவோம். டிடிவி.தினகரன் (அமமுக, பொது செயலாளர்): வாழ்வின் பல்வேறு சூழல்களில் ஒவ்வொரு மனிதரும் பின்பற்ற வேண்டிய நன்னெறிகளை கீதா உபதேசத்தில் கிருஷ்ணர் நமக்காக வழங்கியிருக்கிறார். அவற்றைக் கடைபிடித்து அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும் மன நிறைவும் கொண்ட நல்வாழ்வினை அமைத்துக்கொள்ள கிருஷ்ண ஜெயந்தி வழிகாட்டட்டும். ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): கிருஷ்ணர் அவதரித்ததன் நோக்கமே இந்த உலகத்தில் உள்ள தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான். இந்த நன்னாளில், நாம் ஒவ்வொருவரும் அறத்தை போற்றி தீமைகளை முறியடிக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

 நாடெங்கம் தர்மம் தழைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணன் உரைத்த‘‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற கண்ணனின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று இந்த நன்நாளில் உறுதியேற்போம். எம்.வி.சேகர் (கோகுல மக்கள் கட்சி தலைவர்): ஆயர் குலத்தில் பிறந்து யசோதை மடியில் தவழ்ந்து ஆச்சரியங்கள் பல புரிந்த கோகுலத்தின் குலவிளக்கு உலகெங்கும் தீமைகளை அழித்து தர்மம் தழைத்து நிலைக்க செய்த கீதையின் நாயகன் கிருஷ்ணன் அவதரித்த இத்திருநாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Related Stories: