40 வருடம் கழித்து வெளியாகும் நாகேஸ்வர ராவ் படம்

ஐதராபாத்: தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த படம் 40 வருடம் கழித்து திரைக்கு வர உள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக இருந்தவர்கள் என்.டி.ராமராவ். நாகேஸ்வர ராவ். இதில் நாகேஸ்வர ராவ் நடித்த பிரதிபிம்பலு என்ற படம் கடந்த 1982ல் வெளியாக இருந்தது. இதில் ஜெயசுதா ஹீரோயினாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் அப்போது திரைக்கு வரவில்லை. தொடர்ந்து படத்தை வெளியிட முயற்சிகள் நடந்தும் கைகூடவில்லை. இதனால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் 40 வருடம் கழித்து இந்த படத்தை திரைக்கு கொண்டு வர உள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் ரிலீசாகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ண மூர்த்தி கூறும்போது, ‘பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு முடிந்தும் இந்த படம் நின்று போனது.

அந்த காரணங்களை இப்போது பேச வேண்டியதில்லை. இந்த படத்தில் நாகேஸ்வர ராவ், ஜெயசுதாவுடன் துளசி, கும்மடி, காந்தாராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். சிங்கீதம் சீனிவாசராவ், கே.எஸ்.பிரகாஷ் ராவ் இணைந்து இந்த படத்தை இயக்கினார்கள். சக்ரவர்த்தி இசையமைத்தார்.

செப்டம்பர் 20ம் தேதி நாகேஸ்வர ராவின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறோம்’என்றார்.

Related Stories: