ஜிஎஸ்டியால்தான் படங்கள் ஓடவில்லை; அனுராக் கஷ்யப் குற்றச்சாட்டு

மும்பை: ஜிஎஸ்டியால் மக்களிடம் பணமில்லை. இதனால்தான் எந்த படமும் ஓடவில்லை என இயக்குனர் அனுராக் கஷ்யப் கூறினார். பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப், தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தார். அவரது இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள துபாரா இந்தி படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் ஆமிர்கான் நடித்த லால் சிங் சட்டா, அக்‌ஷய் குமார் நடித்த ரக்‌ஷா பந்தன் உள்பட பல இந்தி படங்கள் இந்த ஆண்டு தோல்வியை தழுவின. இதுபற்றி அனுராக் கஷ்யப் கூறியது: ஏற்கனவே ஜிஎஸ்டியால் வியாபாரிகள் அல்லோலப்பட்டு வருகின்றனர். இப்போது தயிர் முதல் பல்வேறு உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி போட்டு, மக்களை வதைக்கிறார்கள். இந்த ஜிஎஸ்டியால் மக்கள் நொந்து போயிருக்கிறார்கள். அவர்களிடம் சேமிப்புக்காக இருக்கும் பணத்தைதான் ஜிஎஸ்டி பெயரில் பிடுங்கிக் கொள்கிறார்கள்.

அந்த பணத்தை வைத்துதான் அவர்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்குவார்கள். இப்போது அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் படம் பார்க்க மக்கள் வருவதில்லை. எந்த படமும் ஓடுவதில்லை. இதற்கு நடுவிலும் அவ்வப்போது சில படங்கள் ஓடுவது ஆறுதல் தருகிறது. அதற்கு அந்த படம் மிகவும் சிறப்பாக இருந்து, மக்கள் நன்றாக இருப்பதாக பரப்பும் வாய்வழி விமர்சனம்தான் காரணமாக அமைகிறது. அப்படித்தான் அவ்வப்போது நாம் வெற்றியை ருசிக்க காரணமாகிறது. குறிப்பிட்ட படத்தை புறக்கணிக்க சிலர் சொல்வதால் அந்த படம் ஓடவில்லை என அர்த்தம் கிடையாது. இவ்வாறு அனுராக் கஷ்யப் கூறினார்.

Related Stories: