மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கள ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை - 2022 ஐ எதிர்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் வி.இராஜா இராமன், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நேரடியாக கள ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது :

ஒவ்வொரு துறையின் அலுவலர்களும், தமிழக அரசால் அறிவிக்கப்படுகின்ற திட்டங்கள் முழுமையாக உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்து பணியாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் கட்டிடங்கள் தரமானதாகவும் கட்டி முடிக்கப்பட்டு, அவைகள் உரிய காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், அரசு அறிவிக்கின்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்கின்ற வகையில் ஒவ்வொரு துறையும் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். பிறகு ஒவ்வொரு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அவைகளின் நிலை குறித்தும், அனைத்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக பூந்தமல்லி நகராட்சி பகுதியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணியினையும், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளையும், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தும், கூடப்பாக்கம் ஊராட்சி, கம்மவார் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 3 ம் வகுப்புக்கான வகுப்பறையை பார்வையிட்டு, ஆய்வு செய்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

தொடர்ந்து, வெங்கத்தூர் பகுதியில், வேளாண்மை  உழவர் நலத்துறை துறை சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டத்தில் தென்னங்கன்று நடவு செய்யப்பட்டுள்ளதையும், கூடப்பாக்கம் பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக அமிர்தசரோவர் திட்டம் 2022-2023 ன் கீழ்; சமுதாய பங்களிப்புடன் கூடிய நிதியின் மூலம் ரூ.11.93 இலட்சம் மதிப்பீட்டில் 3.55 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குளத்தினையும், கரையான்சாவடி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வடிகால் அமைக்கும் பணியினையும், திருவள்ளுர் நகராட்சிக்குட்பட்ட ஜெயின் நகர் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.மீனாட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் வ.ராஜவேலு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு.செந்தில் குமார், திருவள்ளுர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: