அலுவலக கலவரம் தொடர்பாக காவல் துறை பதில் அளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்களை கைது செய்யக்கூடாது; ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமீன் மனுக்களில், சென்னை காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி புகார் அளித்தார்.

அதன்பேரில், இரு தரப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக இபிஎஸ் தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 37 பேர் தாக்கல் செய்த மனுக்களை  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து 37 பேரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்று ஆகஸ்ட் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யும் வரை மனுதாரர்களை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார். முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களது மனுவில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

Related Stories: