அரிய நோய்க்கு சிகிச்சை சிறுமி டானியாவுக்கு திமுக ரூ.50 ஆயிரம் நிதி: அமைச்சர் சா.மு.நாசர் நேரில் நலம் விசாரித்தார்

சென்னை: அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி டானியாவை அமைச்சர் நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு திமுக சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆவடி அருகே வீராபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் - சவுபாக்யா தம்பதி. இவர்களது மூத்த மகள் டானியா (9). வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் வலதுபுற கன்னத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி நாளடைவில் அந்த பகுதி முழுவதும் பரவி அரியவகை முக சிதைவுநோயால் பாதிக்கப்பட்டார்.   

இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் டானியா அவதிப்பட்டு வருவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை பார்த்து திருவள்ளூர் கலெக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். கடந்த கால மருத்துவ தகவல்கள் குறித்தும் கேட்டு அறிந்தனர்.

இந்நிலையில், இலவச மருத்துவ சேவை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சிறுமி டானியாவுக்கு  கிடைத்து வருகிறது. இதனை தொடர்ந்து,  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வில்லிவாக்கம் திமுக ஒன்றிய செயலாளரும், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான துரைவீரமணி மற்றும் மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகர் ஆகியோர் நேரில் சந்தித்து ரூ.50,000 நிதி உதவி மற்றும் பழங்கள் வழங்கி நேற்று காலை நலம் விசாரித்தனர். சிறுமிக்கு வருகிற திங்கட்கிழமை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை தொடர்ந்து, முக சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை பூந்தமல்லி தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று காலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். சிறுமியிடம் பேசும்போது, முதலமைச்சர் நலம் விசாரித்து வரும்படி தன்னை அனுப்பியதாக அமைச்சர் நம்பிக்கை ஊட்டினார். அப்போது, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமியின் பெற்றோர் உடனிருந்தனர்.

Related Stories: