காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் அனுமதி பஸ்சில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை உடனே இறக்கி விடலாம்: கண்டக்டர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: அரசு பஸ்களில் செல்லும்போது பெண் பயணிகளை முறைத்து பார்ப்பது, கண் சிமிட்டுவது, சைகை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை உடனடியாக கண்டக்டர்கள் கீழே இறக்கி விடலாம். அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆண்கள் மீது புகார் கொடுக்கலாம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பொது போக்குவரத்து வாகனத்தில் பின்பற்றக்கூடிய வகையில் மோட்டார் வாகன விதிகளில் சேர்ப்பதற்காக சில வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு, அதுதொடர்பாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணி முறைத்து பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக் கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றை செய்யக் கூடாது.குறிப்பாக, அவர்களின் செயல்கள், சக பெண் பயணிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. நடத்துனர் எச்சரிக்கை விடுத்த பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். மேலும் பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும் போது தவறான நோக்கில் நடத்துநர்கள் தொடக்கூடாது.

பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகளை பெண் பயணிகளிடம்  கேட்கக்கூடாது. பயணிகளுக்கு குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடத்துநர்கள் நடந்து கொள்ளக் கூடாது. நடத்துநர்களின் பணி குறித்து தெரிவிக்கும் வகையில் வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். காவல் அதிகாரிகள் கேட்கும் போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். பெண் பயணிகளிடம் அநாகரிகமாகவும் துன்புறுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் பயணிகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். நடத்துநர் இல்லாத போது மேற்கூறியவை அனைத்தும் ஓட்டுநரின் பொறுப்பாகும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: