அதிமுகவில் உயர் பொறுப்பில் இருப்பவர் அநாகரிகமாக நடந்துகொண்டால் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்: ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

சென்னை: ‘‘பதவி இல்லாமல் இருக்க முடியாது, உழைப்பும் கிடையாது. உயர் பொறுப்பில் இருப்பவர் அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்” என்று ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: அதிமுக என்ற இயக்கத்தை சில பேர் தன்வசம் கொண்டு போக நினைக்கிறார்கள். அதனை தடுக்கும்போது தான் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்று, யார் ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை. ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஓபிஎஸ்சுக்கு பதவி வேண்டும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. எங்கும் உழைப்பு கிடையாது. ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பதவி வேண்டும். அதுதான் அவருக்கு முக்கியம். அவர் மகன் எம்பியாக வேண்டும். ஒன்றிய அமைச்சராக வேண்டும். மற்றவர்கள் யார் எப்படிச் சென்றாலும் அதைப்பற்றி கவலையில்லை.

11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவருக்கு இருக்கை போடப்பட்டது. அங்கு தானே அவர் வரவேண்டும். காலை 8.30 மணிக்கு இவர் வேனில் செல்கிறார். ரவுடிகளையும், குண்டர்களையும் அழைத்துச் செல்கிறார். கேட்டை உடைக்கிறார்கள். எல்லா அறைகளையும் உடைத்து, அங்கிருக்கும் கணினிகளை சேதப்படுத்தி, அங்கிருக்கும் பொருட்களை அள்ளி கொண்டுவந்து தீவைத்து, முக்கியமான ஆவணங்களை திருடிச் செல்கிறார்கள்.

அதிமுகவின் கட்சி சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். வெளியில் உள்ள கட்சி வாகனத்தை அடித்து நொறுக்குகிறார்கள்.

இவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும். ரவுடிகளையும், குண்டர்களையும் வைத்து ஒரு கட்சிக்கு தலைமை பொறுப்பை வகிப்பவர், இவரே இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறார். இவரோடு எப்படி ஒத்துப்போக முடியும். எனக்காகவா நான் கட்சியில் இருக்கிறேன். கிடையாது. எடப்பாடி பழனிசாமி இல்லை என்றால் யாராவது ஒருவர் வருவார். ஆனால் கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் இப்படி தாழ்வாக, அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி அவரோடு இணைந்து பணியாற்ற முடியும். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் செய்கிறார். 2021ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. அந்த பொதுத்தேர்தலின்போது அனைத்து பொறுப்பாளர்களும் என்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கிறார்கள்.

அவர் ஒத்துக்கொள்ளவில்லை. தேர்தலில் யாரால் தோல்வி ஏற்பட்டது. இவரால் தான் தோல்வி ஏற்பட்டது. வெற்றிபெற்ற பிறகு  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூடி 63 சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை ஆதரிக்கிறார்கள். மூன்று பேர் மட்டுமே அவரை ஆதரிக்கிறார்கள். அப்போது அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதில் ஒரு 15 நாட்கள் கடந்து விட்டது. இவர் கட்சி விரோதசெயல்களில் ஈடுபட்ட காரணத்தினால்தான், தொண்டர்கள் அவர்களுடைய விருப்படிதான் ஒற்றைத் தலைமையே தவிர  தனிப்பட்ட என்னுடைய நிலைப்பாடு கிடையாது. நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் கிடையாது. நான் சொந்த காலில் நின்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்படிதான் கிளைக்கழக செயலாளர் தொடங்கி படிப்படியாக ஒவ்வொரு பொறுப்பை நான் பெற்றிருக்கிறேன்.

Related Stories: