தமிழகத்தில் 4 நாட்கள் பாத யாத்திரை கன்னியாகுமரியில் ராகுல் பேசுகிறார்: தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் ராகுல்காந்தி 4 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில், கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொள்ள, கட்சிக்கு புத்துயிரூட்டவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இந்த பாதயாத்திரை செப்டம்பர் 7ம்தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது.

இதுகுறித்து,தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சத்தியமூர்த்திபவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தமிழக மேலிட பொறுப்பாளார் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளார் ஸ்ரீவல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, செல்லக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் ஜோதிமணி, ஜெயக்குமார், விஜய் வசந்த், மாநில துணை  தலைவர் கோபண்ணா, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் நிர்வாகிகள் ஆலங்குளம் காமராஜ், சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், சிவராஜசேகரன், டில்லிபாபு, ரஞ்சன்குமார், முத்தழகன் உள்பட 76 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி தலைமையில் பாதயாத்திரை பேரணி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. இதற்காக ராகுல் காந்தி 7ம்தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். அங்கு காந்தி,  காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அதை தொடர்ந்து அன்று மாலை அங்கு நடைபெறும் காங்கிரஸ்  பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன் அன்றைய பயணம் நிறைவடைகிறது. மீண்டும் மறுநாள் (8ம்தேதி) காலை பாத யாத்திரையை தொடர்கிறார். கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை 59 கி.மீ. தூரத்தை 3 நாட்கள் நடக்கிறார். 4 நாட்கள் தமிழகத்தில் அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாத யாத்திரை நடைபெறுவதால் தமிழகத்தில் மேலும் ஒரு பகுதிக்கு அவர் வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: