திருச்சி விமான நிலையத்தில் பயணியின் 2 கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து வர முயற்சி: ஊழியர் கைது

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணி கொண்டு வந்த 2 கிலோ தங்கத்தை வெளியே எடுத்து வர முயன்ற விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் வந்தது. பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவர், இருக்கையின் அடியில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருந்ததோடு, அதுபற்றி விமான நிலைய ஊழியர் யுவராஜ் (36) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து யுவராஜ் தனது ஷூவின் உட்பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து வெளியே எடுத்து வர முயன்றபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதை கண்டுபிடித்தனர். அவர்கள் யுவராஜை சோதனை செய்தபோது, ஷூவின் சாக்ஸில் பவுடர் வடிவில் 2 கிலோ தங்கத்தை பதுக்கியிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை, சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள், யுவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: