உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் கேட்டதால் ஆத்திரம் கப்பலூர் டோல்கேட் ஆபீசை அடித்து நொறுக்கிய வாலிபர்: திருமங்கலம் அருகே நள்ளிரவில் பரபரப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த்குமார்(30). அரசு மருத்துவமனை ஒப்பந்த கார் டிரைவர். கடந்த 3 நாட்களுக்கு முன் கப்பலூர் டோல்கேட்டை காரில் கடக்க முயன்றார். டோல்கேட் ஊழியர்கள், இவரிடம் சுங்க கட்டணம் செலுத்தினால்தான் காரை விட முடியும் என்று கறாராக கூறினர். இதற்கு அரவிந்த் குமார், கார் திருமங்கலத்தை சேர்ந்தது தான். அதனால் கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறினார். இதனால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்தது. ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் காரை டோல்கேட் சுங்க வசூல் மையத்திற்குள்ளேயே பிற வாகனங்கள் செல்ல முடியாத வகையில் நிறுத்தி விட்டு சென்று விட்டார். ஊழியர்கள் காரை அப்புறப்படுத்தினர்.

நேற்று முன்தினம் இரவு அரவிந்த்குமார் காரை மீண்டும் எடுக்க கப்பலூர் டோல்கேட் வந்தார். ஊழியர்களிடம், ‘‘கார் எங்கே’’ எனக் கேட்டுள்ளார். அவர்கள், திருமங்கலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சென்று விசாரித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஓரிடத்தில் நின்ற தனது காரை எடுக்க முயன்றார். அதை டோல்கேட் ஊழியர்கள் தடுக்கவே ஆவேசமடைந்த அரவிந்த்குமார், டோல்கேட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். இதில் கண்ணாடி ஜன்னல், கம்யூட்டர், நாற்காலிகள் சேதமடைந்தன. பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து டோல்கேட் மேலாளர் ராஜா கொடுத்த புகாரின்படி திருமங்கலம் டவுன் போலீசார், வழக்குப்பதிந்து அரவிந்த்குமாரை தேடி வருகின்றனர்.

Related Stories: