நல்ல கருத்துகளை ஏற்போம் சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஏற்க மாட்டோம்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி

மதுரை: நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம். அதே சமயம் சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரையில் நேற்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி பேசியதாவது; ஒரு இயக்கத்துக்கு கொள்கையும், தத்துவமும் முக்கியம். அதுபோல ஒரு அரசுக்கும், அரசியல்வாதிக்கும் மனிதநேயமும், செயல்திறனும் முக்கியம். இலவச திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடக்கிறது. அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். தமிழக, இந்திய வரலாற்றிலேயே பொருளாதாரம், சட்டம், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், பிரதமருக்கு தலைமை ஆலோசகர்களாக இருந்த இரு நபர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அரசு. இதற்குமேல் அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் முதல் அரசாக ஏற்போம். ஆனால், சர்வாதிகாரமாக எங்களுக்கு தான் உரிமை, தகுதி உள்ளது என்பது போலும், நாங்கள் சொல்வதை தான் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையிலும் சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

* இலவசம் தவறென்பது சமுதாய துரோகம்

மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘மிதிவண்டியை இலவசமாக கொடுப்பது அழகல்ல என யார் சொன்னாலும் அதற்கு மேல் ஒரு தவறான கருத்து, ஜனநாயகத்தில் இருக்க முடியாது. சமூக நீதிக்கு கல்வி முக்கியம். குறிப்பாக பெண் கல்வி முக்கியம். அதற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் திட்டமிட்டு, அறிவோடு நிதியை ஒதுக்கி அரசு செயல்படுத்தி வருகிறது. இலவசம் தவறு என சொன்னால் அதை விட சமுதாய துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது’’ என்றார்.

Related Stories: