செங்கல்பட்டில் பரபரப்பு கஞ்சா விற்க தடையாக இருந்த சிசிடிவி கேமரா உடைப்பு: ஒருவருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளான  வல்லம், மேலமையூர், ஆலப்பாக்கம் மற்றும் ராம்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு நகர மற்றும் தாலுகா காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அப்படியிருந்தும், போலீசாரை மீறி சில பேர்  தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார், ரோந்து என  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதையடுத்து,  வல்லம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுப்பதற்காக, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருவர் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அது கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு மிகவும் இடையூறாக இருந்தது. இதனால், கஞ்சா வியாபாரி  ஒருவர் அந்த சிசிடிவி கேமராவை உடைத்தார். இப்புகாரின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கேமராவை உடைத்த நபர் சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஹரி (27) என்பதும், இவர் சென்னையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, இப்பகுதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வதும், அதற்கு இந்த கேமரா இடையூறாக இருப்பதால், அதை உடைத்ததும் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இக்காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: