நெருக்கடி காலங்களில் உதவும் சேமிப்பு

நமக்கு எவ்வளவு தின, வார, மாத வருமானம் இருந்தாலும் அதில் சேமித்தே ஆக வேண்டும். இதையொட்டியே அவரவர் வாழ்க்கைத் தரத்தை நெருக்கடி காலத்தில் சமாளிக்க முடியும். இன்றைய ஐடி துறையினர் உட்பட பலர் நாளை என்ற திட்டமிடலை விட்டு முழுமையையும் செலவழித்து வருகிறார்கள். ஆனால் 20 சதவீத சேமிப்பு அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். குறைந்தது 10 சதவீதமாவது சேமிக்க வேண்டும். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் தவறினாலும் அடுத்த நாளில், வாரத்தில், மாதத்தில் முடிந்தவரை சரிகட்டி விட வேண்டும்.

துணி தேய்ப்பவர் தினமும் ரூ.1500, பண்டிகை நாட்களில் ரூ.2500, ரூ.3000 வரை சம்பாதிக்கிறார். தின, வாரக்கூலி என்பதால் வரியும் கட்டுவதில்லை. கொரோனா சமயத்தில், பணி இழப்பு காரணமாக இவரால் ஒரு வாரம் கூடச் சமாளிக்க முடியாத சூழ்நிலை இருந்திருக்கும். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் வேலை செய்கிறாரோ அந்த அளவுக்கு வருமானம் கூடும். ஆனால், தற்போது பணம் இல்லாமல் அலைந்து திரிகிறார். காரணம் என்ன தெரியுமா? அவரிடம் சேமிப்பில்லாதது மட்டும்தான்.

இவர் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சதவீத ஊதியத்தைச் சேமித்து இருந்தால், அவர் அடைந்த மோசமான நிலையைத் தவிர்த்து இருக்கலாம். இது ஒரு எடுத்துக்காட்டுதான். இதுபோலவே அவரவர் நிலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். சுருக்கமாக சொன்னால் நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், சிறு சேமிப்பு அவசியம். இதுவே நம்முடைய நெருக்கடி காலங்களில் உதவும்.

Related Stories: