நெல்லை கண்ணன் மறைவுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல்..!

சென்னை: சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார். 77 வயதான நெல்லை கண்ணன் சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வப்போது மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்ட நிலையில், வயது முதிர்வு காரணமாக நடப்பதற்கு சிரமம் கொண்டிருந்தார். இந்நிலையில், நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் இன்று திருநெல்வேலியில் உள்ள  அவரது இல்லத்தில் காலமானார். 1970 முதல் மேடையில் ஒலித்த அவரது குரல் இன்று ஓய்வெடுத்துள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்குச் சிந் தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் நெல்லை கண்ணன் வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். சிறந்த தமிழறிஞர் நெல்லைக்கண்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு. ஆற்றல் வாய்ந்த பேச்சாளர். மனதில் பட்டதை பேசக்கூடிய அறிவு நாணயம் மிக்கவர்.

தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப்பற்றி பேசியது மிகச்சிறந்த பேச்சு. தந்தை பெரியார் அவர்களை இதுவரை அப்படி ஒரு கோணத்தில் யாரும் பேசியிருக்க மாட்டார்கள். அவரை நான் நேரில் அழைத்து பாராட்டினேன். அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். எந்த வித பின்விளைவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக பேசக்கூடியவர். தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது. அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தனது இரங்கல் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: