வானுயர வளர காத்திருக்கும் மரங்கள்; களிமண்ணால் செய்யப்படும் விதை விநாயகர் சிலைகள்: நெல்லை மண்பாண்ட தொழிலாளர்கள் புதிய முயற்சி

நெல்லை: வானுயர வளர காத்திருக்கும் விதைகளை பயன்படுத்தி களிமண்ணால் விநாயகர் சிலைகளை நெல்லை காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்து அசத்தியுள்ளனர். இந்த சிலைகளை வாங்க பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி, கூனியூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு விதவிதமான மண்பானைகள், சுவாமி சிலைகள், பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் அழகு சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

நாடு முழுவதும் வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நூற்றுக்கணக்கான மண்டபாண்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அரை அடி முதல் 5 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், இங்கிருந்து மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்பத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதால் பலரும் இச்சிலைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். எனவே, இந்த சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

அதாவது, விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு கரைக்கப்படும் விநாயகர் சிலைகளின் உள்ளே மரங்களின் விதைகளை வைத்து சிலைகளை தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் நீர்நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகளிலிருந்து பிரியும் விதை வித்துக்கள் கரை ஒதுங்கும் பகுதியில் மரமாக வளர வாய்ப்புகள் உள்ளன. விநாயகர் சிலைகள் பெரும்பாலும் நதிக்கரை, ஏரிக்கரைகளில் கரைக்கப்படுவதால் எளிதில் விதை வித்துக்கள் மரமாக ஓங்கி வளரும் என்பதால், தொழிலாளர்களின் இந்த புதிய முயற்சி இயற்கை வளங்களை பேணி காக்க அஸ்திவாரமாக அமைந்துள்ளது சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர் கிருஷ்ணன் கூறுகையில், ‘களிமண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலையின் உள்ளே விதை வித்துக்களை வைத்து சிலைகளை தயார் செய்கிறோம். இம்முயற்சியின் மூலம் அழிந்து வரும் காடுகளையும், மரங்களையும் வளர்க்கவும், பசுமையை பேணுவதற்கும் இந்த விதை விநாயகர் சிலை கைகொடுக்கும்’ என்றார்.

Related Stories: