கொத்திமங்கலம் கூட்ரோட்டில் இயங்காத சிக்னலால் வாகன விபத்து அதிகரிப்பு

திருக்கழுக்குன்றம்: கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் நீண்ட காலமாக போக்குவரத்து சிக்னல் இயங்காததால், அங்கு எந்நேரமும் அதிகளவு வாகன விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் பலர் படுகாயம் அடைகின்றனர். இத்தகைய அவலநிலையை தடுக்க, அங்குள்ள சிக்னல்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்துகின்றனர்.

திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் கிராமப் பகுதியில் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மற்றும் கல்பாக்கம் என 4 வழிகளை இணைக்கும் கூட்ரோடு உள்ளது. இதன் வழியே நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் என்ன காரணத்தினாலோ இதுவரை இயங்கவில்லை.

இங்கு போலீசாரும் பணியில் இருப்பதில்லை.

இதனால் கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் எந்நேரமும் 4 பக்கங்களிலும் இருந்து வேகமாக வாகனங்கள் ஒன்றின்மீது மற்றொன்று மோதி விபத்தில் சிக்குகின்றன. இதில் பலர் படுகாயம் அடைந்தோ அல்லது ஒருசிலர் உயிரிழக்கின்றனர். மேலும், அப்பகுதிக்கு புதிதாக வரும் பலர் எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்பதில் குழப்பம் அடைகின்றனர்.

எனவே, கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் இயங்காத போக்குவரத்து சிக்னலால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், அங்கு ரவுண்டானா அமைத்து காட்சி பொருளாக மாறிய சிக்னலை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: