மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவது கொடுமை: கேரள உயர் நீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம்: மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமைதான். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று கூறிய கேரள உயர் நீதிமன்றம், இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஏற்றுமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். எம்சிஏ படித்த 2 பேரும் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த அதே வருடம் நவம்பர் 2ம் தேதி, விவாகரத்து கோரி ஏற்றுமானூர் குடும்ப நீதிமன்றத்தில் இளம்பெண் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்தது: திருமணம் முடிந்து 40 நாட்கள் மட்டுமே நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம்.

மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னிடம் கணவர் கொடூரமாக நடந்து கொண்டார். திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களிலேயே தன்னுடைய எண்ணத்தில் உள்ள பெண்ணைப் போன்ற அழகு எனக்கு இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தினார்.

தனக்குத் தெரிந்த சில பெண்களை பற்றிக் கூறி அவர்களைப் போல அழகு எனக்கு இல்லை என்றும், தாயின் வற்புறுத்தலினால் தான் என்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் கூறினார். உடல்ரீதியாகவும் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள மறுத்து விட்டார். எனவே கணவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஏற்றுமானூர் நீதிமன்றம், அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவரது கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், சுதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

கடந்த சில வருடங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இளம்பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தது: உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மனரீதியாகவும், கடுமையான சொற்களை பயன்படுத்துவதும் கொடுமைதான். மற்ற பெண்களுடன் மனைவியை ஒப்பிடுவதும் கொடுமையாகும். அதை எந்தப் பெண்ணும் பொறுத்துக்கொள்ள மாட்டார். இவர்களுடைய பந்தம் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு சிதிலமடைந்து விட்டது.

இதை நீதிமன்றம் கவனிக்காமல் விட்டால் அது சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். மனரீதியாக கொடுமைப்படுத்தியதால் தனது உடல் நிலையும் பாதிக்கப்பட்டதாக இளம்பெண் கூறுவதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். எனவே அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Related Stories: