மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தான் செயல்பட்டு வந்தன. அவற்றிலும் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்றுடன் மூடப்பட்டு விட்டன. இனி 14 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான்  செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிரிடப்படும் பரப்பு, சாகுபடி செய்யப்படும் அளவு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும்  குறைவு. கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அடுத்த 6 மாதங்களில் அவற்றில் 13 கொள்முதல் நிலையங்களும், ஏற்கனவே செயல்பட்டு வந்த 29 நெல் கொள்முதல் நிலையங்களில் 22 நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில்  நெல் உற்பத்தித் திறனில் முதலிடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். அங்கு ஒரு ஹெக்டேரில்  4,490 கிலோ நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சராசரி உற்பத்தித் திறனை விட ஒரு டன் அதிகமாகும்.

 

இதை மனதில் கொண்டு, உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற  மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: