குஜராத் குற்றவாளிகள் விடுதலை: மதிமுக தலைவர் வைகோ, ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மதிமுக தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. விடுதலை பெற்ற இந்தியாவில் மிக மோசமான கலவரம் அந்தாண்டில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டதாகும்.

இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான பில்கீஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 11 பேரை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுவிக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக கருதப்படும் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேருக்கு விடுதலை அளிக்கும் குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனம் மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் கொலையாளிகள் விடுவிக்கப்பட்டது பெண் இனத்துக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என மதிமுக தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 2002ல் குஜராத் கலவரத்தின் போது இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். 2002, மார்ச் 3ல் ஆயுதங்களுடன் ரன்திக்பூர் கிராமத்தில் நுழைந்த கும்பல், 5 மாத கர்ப்பிணி உள்பட 17 இஸ்லாமிய பெண்களை சூழ்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து, 11 பெண்களை கொன்றது. கொடூர கொலை குற்றவாளிகள் 11 பேருக்கு 2008-ல் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையாளிகளை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதை அடுத்து, 11 பேரும் விடுதலை  செய்யப்பட்டனர்.

75ம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தை ஒட்டி குஜராத் மாநில பா.ஜ.க. அரசு 11 கொலை குற்றவாளிகளை முன்விடுதலை செய்தது மன்னிக்கவே முடியாத மாபாதகச் செயலாகும் என அவர் கூறினார். மேலும், விடுதலை நாள் விழாவில் உரையாற்றிய பிரதமர், பெண்கள் பாதுகாப்பு, மரியாதை போன்றவற்றை குறிப்பிட்டார். பிரதமரின் சொல்லுக்கும், அவரது செயலுக்கும் துளிகூட தொடர்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. குஜராத் அரசு தனது உத்தரவை திரும்பப் பெற்று, வன்முறை நடத்திய கொலையாளிகளை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இச்சம்பவம் குறித்து, ப.சிதம்பரம் கூறுகையில், குஜராத்தில் மதக்கலவரத்தின் போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை விடுவித்ததில் முறைகேடு உள்ளது என ப.சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரை செய்த மறுஆய்வு குழுவில் தகுதியற்ற நபர்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார். பாலியல் பலாத்கார குற்றம் செய்தோரை விடுவிக்க பரிந்துரைத்த குழுவில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். கோத்ரா ரயில் எதிர்ப்பு வழக்கில் போலீஸ் தரப்பு சாடசியாக இருந்த முரளி மூல்சந்தானியும் மறு ஆய்வு குழுவில் உள்ளார். கைதிகளை விடுவிக்க பரிந்துரைத்தது நடுநிலையான, பாரபட்சமற்ற சட்ட நிபுணர்களை கொண்ட குழுவா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Related Stories: