புதுக்கோட்டை அருகே ஆட்சியர் முன் தேசியக்கொடியை ஏற்றிய பட்டியலின ஊராட்சி தலைவர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை பள்ளிக்கூடத்தில் தேசியக்கொடி ஏற்ற விடவில்லை என புகார் எழுந்த நிலையில், அவர் கொடியேற்ற ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழையூர் அரசு உயர்நிலை பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று, பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் கொடியேற்ற அனுமதி மறுப்பதாக, அவ்வூராட்சியின் தலைவர் தமிழரசன் கடந்த 15ம் தேதி சமூக வலைத்தளங்களில் மிக உருக்கமாக பேசி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், இக்காட்சி குறித்து, அம்மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில், இன்று ஆட்சியர் கவிதா ராமு சம்மந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கவிதா ராமு கூறுகையில், பல பள்ளிகளில் ஊராட்சிமன்ற தலைவர்கள் கொடியேற்றுகின்றனர். ஆனால் ஒரு சில பள்ளிகளில் இதுபோன்ற சமூக வேறுபாடால் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டும் வருகிறது. அதனடிப்படையில் இவரும் அங்குள்ள அரசு பள்ளியில் கொடியேற்ற விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு கல்வித்துறை அனுமதி மறுத்துள்ளதால், தானே முன்வந்து இச்செயலினை செய்ய நடவடிக்கை மேற்கொண்டேன். இதற்கும், சமூக ரீதியிலான பிரச்சனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறினார். மேலும் ஊராட்சிமன்ற தலைவர் தமிழரசன், முதன் முறையாக இப்பள்ளியில் கொடியேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: