காஞ்சிபுரத்தில் பரபரப்பு துணை தாசில்தார் மனைவி அடித்து கொலை?.. போலீசார் தீவிர விசாரணை

சென்னை: காஞ்சிபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது, காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ் (34). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சங்கீதா (30), இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சதீஷ்சும், சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். சதீஷ் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உதவி பெற்று தற்போது உத்திரமேரூரில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் மது அருந்திவிட்டு வந்த சதீசுக்கும், மனைவி சங்கீதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் சதீஷ் தாக்கியதில் அவருடைய மனைவி சங்கீதா உயிரிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, மர்மமான முறையில் சங்கீதா உயிரிழந்ததாக கிடைத்த தகவலின்பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார், சங்கீதாவை அவரது கணவர் சதீஷ் அடித்துக் கொலை செய்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். துணை தாசில்தார் மனைவியின் மர்ம மரணம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: