சென்னை ஓ.எம்.ஆரில் காவேரி மருத்துவமனையின் ஹம்சா ரீஹேப் மையம்: நடிகர் விக்ரம் துவக்கி வைப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின்,  ஹம்சா ரீஹேப் மைய துவக்க விழா நேற்று நடைபெற்றது. காவேரி மருத்துவமனையின் அங்கமாக செயல்படும் இந்த மையத்தில், ஆட்டிசம், கற்றல் குறைபாடு, பேச்சுக்கோளாறுகள், மூளை மற்றும் முதுகுதண்டு காயத்தால் சிகிச்சை பெறும் குழந்தைக்கு மறுவாழ்வு மையமாக செயல்பட உள்ளது. இந்த மையத்தை நடிகர் விக்ரம் நேற்று துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பேசுகையில்: நான் நடித்த இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாத நிலையில் குழந்தைகளுக்கான மையம் திறப்பு என்பதால், பங்கேற்க ஒப்புக் கொண்டேன். சினிமாவில் தான் நாங்கள் ஹீரோ, உண்மையில் டாக்டர்கள் தான் ஹீரோக்கள், சிறுவயதில் நான் டாக்டராக வேண்டும் என பெற்றோர் விரும்பினர். மதிப்பெண் குறைவாக இருந்ததால், டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய்விட்டது.

மேலும் இளம் வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக நீண்ட நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தேன். டாக்டர்கள் என்னால் நடக்க முடியாது என்றனர். ஆனால் விடா முயற்சியாக நடிக்க வேண்டும் என்ற வெறியோடு நடக்க துவங்கினேன். எப்படி நடந்தீர்கள் என எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அதிர்ச்சி அடைந்ததுடன், வேறு யாராவது இருந்தால் போதைக்கு அடிமை ஆகி இருப்பார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என என்னிடம் என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: ஹம்சா மையத்தில் மூலம் முதுகுதண்டு, நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய சிக்கல்கள் போன்றவற்றிற்கு முழுமையான சிகிச்சையினை வழங்கி வருகிறோம். அதைப்போன்று ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் இத்தகைய பாதிப்புகளை நாங்கள் பார்க்கிறோம். எனவே அவர்களுக்கான சுற்றுச்சூழல், நவீன கட்டமைப்பு, மேம்பட்ட சாதனங்கள் வசதிகளுடன், சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகள் நல மற்றும் மறுவாழ்வு டாக்டர்கள் அடங்கிய குழுவை இப்புதிய மையத்தில் வழங்குகிறோம். இம்மையத்தில் இருப்பவர்கள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: