வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு: செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: வடபழனி நிதி நிறுவனத்தில் கத்திமுனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில், தலைமறைவாக உள்ள 6 முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல் உதவியுடன் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வடபழனி மன்னார் முதலி 1வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் கடந்த 10 ஆண்டுகளாக எம்எம்டிஏ, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சிறு கடை வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதுதவிர நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கடந்த 8 மாதங்களாக ‘ஓசானிக் கேபிடல்’ என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் அதிகளவில் சிறு வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை வட்டிக்கு பணம் வாங்கியுள்ளதால் ஒவ்வொரு நாளும் பல லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிறது.

வழக்கம்போல், நேற்று முன்தினம் நிறுவன ஊழியர்கள் 5 பேர் பணியில் இருந்தனர். மாலையில் சிறு வியாபாரிகளிடம் பணம் வசூலிக்க 3 பேர் சென்றுள்ளனர். பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் தீபக் மற்றும் நவீன்குமார் மட்டும் கணக்கு வழக்குகளை கவனித்து வந்தனர். அப்போது திடீரென 7 பேர் கும்பல் முகமூடி அணிந்து கொண்டு, பைனான்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து அலுவலக கதவை உள்பக்கமாக பூட்டினர். பிறகு ஊழியர்கள் தீபக் மற்றும் நவீன்குமாரை கத்திமுனையில் மிரட்டி லாக்கர் சாவியை பறித்தனர். அவர்களின் சத்தம் கேட்டு எதிரே வசித்து வரும் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் ஓடி வந்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த பைனான்ஸ் நிறுவனத்தின் கதவை வெளிப்புறம் பூட்டினார். உடனடியாக, சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சரவணன் புகார் அளித்தார்.

இதற்கிடையே சாவியை பிடுங்கிய கொள்ளையர்கள் லாக்கரை திறந்து அதில் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை ஒரு பையில் போட்டு கொண்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் அலுவலக கதவு முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியே தப்பிச்செல்ல முடியவில்லை. இருந்தாலும், கொள்ளையர்கள் 7 பேரும் சேர்ந்து கதவை உடைத்து கொண்டு, போலீசார் வருவதற்குள் மின்னல் வேகத்தில் தப்பினர். பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் கொள்ளையர்களை விடாமல் பின் தொடர்ந்து ஆழ்வார்திருநகர் 1வது ெதருவில் பொதுமக்கள் உதவியுடன் ஒருவரை மடக்கி படித்து சரமாரியாக உதைத்தனர். இதில் பிடிபட்ட நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த வடபழனி போலீசார் வந்து பொதுமக்களிடம் பிடிபட்ட நபரை மீட்டு பைக்கையும்  பறிமுதல் செய்தனர். வடபழனி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, ஆழ்வார் திருநகர் இந்திரா நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்த ரியாஷ் பாஷா (22) என தெரியவந்தது. இந்த கொள்ளையில் தலைமறைவாக உள்ள 2 கல்லூரி மாணவர்கள், 2 பட்டதாரிகள் உள்பட 6 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை வைத்து தேடி வருகின்றனர். தலைமறைவான 6 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு பெருங்களத்தூர் பகுதியில் இருந்ததாக செல்போன் சிக்னல் காட்டியுள்ளது. அதன் பிறகு சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே குற்றவாளிகளை தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்க யோசனை தெரிவித்த

கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளி: கைதான கல்லூரி மாணவன் பரபரப்பு தகவல்

கொள்ளை அடித்துவிட்டு தப்ப முயன்றபோது பொதுமக்களிடம் சிக்கியதால் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் ரியாஷ் பாஷா, விசாரணையின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பிடிபட்ட ரியாஷ் பாஷா ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வேலை செய்து வரும் மொட்டை (28) என்ற நண்பர் உள்ளார்.

மொட்டை ‘ஓசானிக் கேபிடல்’ பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக வட்டிக்கு பணம் வாங்கி, சிறுக சிறுக நாள் கணக்கில் பணத்தை கொடுத்து வருகிறார். நான் வட்டிக்கு பணம் வாங்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் பணம் நடமாட்டம் உள்ளது. மாலை நேரங்களில் இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் வசூலிக்க வெளியே சென்று விடுவார்கள். எனவே இந்த நிறுவனத்தில் பணம் கடன் வாங்குவது போல் மொத்த பணத்தையும் கொள்ளையடித்து வந்துவிடலாம் என்று  மொட்டை யோசனை கூறியுள்ளார்.

அதன்படி கடந்த 2 நாட்களாக அந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு மெட்டையுடன் சேர்ந்து எப்படி கொள்ளையடிப்பது என்பது குறித்து திட்டமிட்டோம். எங்கள் திட்டத்திற்கு நண்பர்களான மொட்டை (28), ஜானி (22), இஸ்மாயில் (21), பரத் (23), கிஷோர் (23), தமிழ் (21) ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டோம். நாங்கள் விளையாட்டாக திட்டமிட்டு இன்று பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டோம் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: