தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம் : ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமானது தொடர்பாக ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிய ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கு தாம்பரம் - தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 460க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள், இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யவும், 50க்கும் மேற்பட்ட கனரகவாகனங்கள் எப்.சி செய்வதற்காகவும் வருகிறது. அதுமட்டும் இன்றி ஒருநாளுக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாகன ஆர்.சி புத்தகங்கள் பெற்றுச்செல்லவும் வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி வியாழக்கிழமை அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் 36 ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் திடீரென மாயமானது. தகவலறிந்த தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஆய்வின்போது ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து நேற்று முன்தினம் போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் ஆகியோர் காலை முதல் இரவு வரை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர். ஆய்வின் முடிவில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமிகாந்த் காளத்தி, இளம் உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் உட்பட 5 பேரை பணி நீக்கம் செய்ததுடன் இந்த வழக்கு முடியும் வரை 5 பேரும் அலுவலகத்திற்கு வரக்கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாயமான 36 ஆர்.சி புத்தக ஸ்மார்ட் காடுகளும் டிஆக்டிவேட் செய்யப்பட்டு புதிய ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு உள்ளதாக என தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கூறுகையில், `ஆர்.சி.புத்தக ஸ்மார்ட் கார்டுகளை வேண்டுமென்றே மர்ம நபர்கள் யாரோ எடுத்து சென்றுள்ளனர். ஆனால் மாயமான 36 ஆர்.சி.புத்தக ஸ்மார்ட் காடுகளும் டிஆக்டிவேட் செய்யப்பட்டு புதிய ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆக்டிவேட் செய்யப்பட்ட ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகளை யாராலும் எதற்காகவும் பயன்படுத்த முடியாது, எனவே இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆர்.சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் மாயமானது குறித்து எந்த உரிமையாளர்களும் எங்கும் புகார் அளிக்கவில்லை. தற்போது ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் ஆட்கள் பற்றாக்குறையால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெரும்பாலான பணிகள் முடங்கியுள்ளது’ என்றனர்.

Related Stories: