தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

சென்னை: தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் பயன்ெபறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.  

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் அதிக எண்ணிக்கையில் தாட்கோ மூலம்  செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழில் முனைவோர் திட்டம், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல்,   இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் இனத்தவராக இருப்பின் //application.tahdco.com மற்றும் பழங்குடியினராக இருப்பின் //fast.tahdco.com  என்ற தாட்கோ இணையதளத்தில் குடும்ப அட்டை அல்லது  இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். வயது வரம்பு 18 முதல் 65 வரை ஆகும்.  மேலும் விவரங்களுக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். 044-25246344, 9445029456 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: