பூக்கடை பகுதியில் 2 ஆண்டாக வாடகை தராத 130 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் மாநகராட்சிக்கு வாடகையை தராத 130 கடைகளுக்கு நேற்று காலை மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம் 5வது மண்டலம், 59வது வார்டுக்கு உட்பட்ட ரத்தன்பஜார் பகுதியில் 77, பிரேசர் பிரிட்ஜ் ரோடு பகுதியில் 83 என மொத்தம் 160 கடைகள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. செல்போன் ரிசார்ஜ், டீக்கடை, ஹெல்மெட் உள்பட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் நீண்ட காலத்துக்கு முன் நடைபாதை கடை நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட 160 கடைகளை நடத்தி வந்தவர்கள், சென்னை மாநகராட்சிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.40.60 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து நோட்டீஸ் வழங்கியும் இதுவரை வாடகை நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, வாடகை நிலுவை வைத்துள்ள 160 கடைகளை பூட்டி சீல் வைக்க மண்டல அதிகாரிகள் திட்டமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்றிரவு ஆன்லைன் மூலமாக 30 கடைகளின் உரிமையாளர்கள் வாடகை நிலுவையை செலுத்திவிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் பூக்கடை, ரத்தன் பஜார் பகுதி மற்றும் பிரேசர் பிரிட்ஜ் பகுதிக்கு 5வது மண்டல உதவி வருவாய் அதிகாரிகள் நிதிபதி, ரங்கநாதன் தலைமையில், வரி மதிப்பீட்டாளர்கள் ரஹமதுல்லா, விஜயகிருஷ்ணன், உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், பத்மநாபன் ஆகியோரை கொண்ட குழு மற்றும் பூக்கடை இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். அங்கு வாடகை நிலுவை வைத்திருந்த 130 கடைகளை பூட்டி, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு வாடகை நிலுவை தொகையை உடனடியாக வரைவு காசோலையாக செலுத்தும் பட்சத்தில், உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று கடைகள் திறந்து விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கடந்த வாரம் வடக்கு கோட்டை சாலையில் வாடகை நிலுவை வைத்திருந்த 256 கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர் எனக் குறிப்பிடத்தக்கது.

Related Stories: