இந்தியாவில் கடந்தாண்டில் 31 கோடி டன் உணவு தானியங்கள் உற்பத்தி: வெயிலால் கோதுமை உற்பத்தி 3% சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 2021-2022 பயிர் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 31.57 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டை விட இது அதிகம். நாட்டில் 2021-22 பயிர் ஆண்டுக்கான (ஜூலை 2021 - ஜூன் 2022 வரை) நான்காவது முன்கூட்டிய  மதிப்பீட்டை ஒன்றிய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜூன்  2022ம் ஆண்டில்  முடிந்த பயிர் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய  உற்பத்தி 31 கோடியே 57 லட்சம் டன்களாக இருக்கும். கடந்த  பயிர் ஆண்டில் இது 31 கோடியே 75 ஆயிரம் டன்னாக இருந்தது. அதேபோல், 2021-2022ல் நாட்டின் மொத்த கோதுமை உற்பத்தி 3 சதவீதம் குறைந்து 10 கோடியே 68 லட்சம் டன்களாக  இருக்கும். இது, முந்தைய ஆண்டில் 10 கோடியே 95 கோடி டன்களாக இருந்தது. வட மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் வெப்ப அலை காரணமாக பயிர்கள் கருகியதால் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளது.

அரிசி உற்பத்தி 13 கோடியே 29 லட்சம் டன்களாக இருக்கும். இது, முந்தைய ஆண்டின் 12 கோடியே 43 லட்சம் டன்களாக இருந்தது. 2020-21 பயிர் ஆண்டில் 2.5 கோடி டன்களாக இருந்த பருப்பு உற்பத்தி இந்த பயிர் ஆண்டில் 2.7 கோடி டன்னாக  இருக்கும். எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி முந்தைய ஆண்டில் 3 கோடியே 59 லட்சம் டன்களாக  இருந்த நிலையில், 2021-22 பயிர் ஆண்டில் 3 கோடியே 76 லட்சம் டன்களாக இருக்கும். கரும்பு உற்பத்தி முந்தைய ஆண்டில் 40 கோடியே 53 லட்சம் டன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 43 கோடியே 18 லட்சம் டன்களாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: