குறுகிய கால விவசாய கடன்களுக்கான வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ரூ.34,856 கோடியை ஒதுக்கீடு செய்து, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், 7 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால விவசாய கடன்களுக்கு ரூ.1.5 சதவீத வட்டி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை குறுகியக் காலக் கடனுதவி அளிக்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படும். இதற்காக, ரூ.34,856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதே போல், அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் ரூ.50 ஆயிரம் கோடி அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் ரூ.4.5 லட்சம் கோடியானது, ரூ.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓட்டல் மற்றும் அது சார்ந்த துறைகள் பயன்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.3.67 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: