போதை கடத்தல் கும்பலின் விவரங்களை அம்பலப்படுத்தும் இணையதளம் துவக்கம்

புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக போதை கடத்தலில் கைதான குற்றவாளிகள் பற்றிய விவரங்களை தெரிவிக்கும் வகையில் புதிய இணையதளத்தை ஒன்றிய அரசு தொடங்கி உள்ளது. போதை கடத்தும் கும்பல்கள் ஒரு மாநிலத்தில் இருந்து  இன்னொரு மாநிலத்துக்கு தப்பி சென்று விடுகின்றனர். கடந்த மாதம் சண்டிகரில் நடந்த போதை பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில்  போதை கடத்தலை தடுக்கும் வகையில், ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்குவதற்கான புதிய திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ‘நிதன்’ என்ற  இணையதளத்தை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) ஆரம்பித்து உள்ளது.

ஒன்றிய, மாநில  மற்றும் பல விசாரணை அமைப்புகளின் பயன்பாட்டுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போதை கடத்தலில் கைதான குற்றவாளிகள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அவர்களின் குற்ற விவரங்கள், தனிப்பட்ட விவரம், நீதிமன்ற  வழக்குகள், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கின் தற்போதைய நிலை போன்றவையும் இடம் பெற்றிருக்கும். இது குறித்து தேசிய போதை கடத்தல் தடுப்பு பிரிவின் இயக்குனர் ஜெனரல்  பிரதான் கூறுகையில், ‘இந்த இணையதளத்தில் போதை பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டில் உள்ள கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்  விசாரணை அமைப்புகளுக்கு இது  உதவியாக இருக்கும்,’’ என்றார்.

Related Stories: