வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், திமுக சார்பில் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு, மருதுகணேஷ், அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பாலகங்கா, காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் தாமோதரன், பாஜ சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி துணை ஆணையாளருமான விஷூ மஹாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) ஜி.குலாம் ஜிலானி பாபா  உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஆதார் இணைப்பு, வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது பலர் தங்களுடைய  கருத்துக்கள், விவாதங்களை முன்வைத்தனர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது  அரசியல் கட்சி பிரதிநிதிகள் சிலர், ‘‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மிக கவனமுடன் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்  விடுத்தனர். மேலும் ஒரே குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒரே வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.  

அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் மத்தியில் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். 2023ம் ஆண்டின் ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1ம் தேதிக்குள் 18 வயதை அடைபவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்கலாம்.

மேலும் ஆதார் இணைப்பு பணி 2023 ஏப்ரல் 1ம் தேதிக்குள் நிறைவு பெறுகிறது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் பணி அக்., 24ம் தேதி வரை நடைபெறுகிறது. துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு பட்டியல் தயாரிப்பு அக்டோபர் 25 முதல் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்புறைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் பணி அக்., 24ம் தேதி வரை

நடைபெறுகிறது.

Related Stories: