89வது பிறந்த நாளை முன்னிட்டு முரசொலி மாறன் சிலைக்கு துரைமுருகன் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை: தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் மலரஞ்சலி

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவர் முரசொலி மாறன். அவரை ‘எனது கண்ணின் கருவிழி’ என்றே கலைஞர் அழைப்பார். திமுகவினரும் அவ்வாறே போற்றுவர். அத்தகைய பெருமைக்குரிய மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

சுமார் 30 ஆண்டுகாலமாக ஒன்றிய அமைச்சராக இருந்தவரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவருமான முரசொலி மாறனின் பிறந்த நாளை திமுகவினர் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்குவது என அவரது பிறந்த நாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, திமுக தலைமை கழகம் சார்பில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் உருவச்சிலையும், அதற்கு கீழே உள்ள அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

முரசொலி அலுவலகத்துக்கு வந்த திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அவரை தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு,பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோயில் சாமிநாதன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், அண்ணாநகர் மோகன், டாக்டர் எழிலன், தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு மற்றும் திமுக முன்னணியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதேபோன்று, எம்பி தயாநிதி மாறன், முரசொலி மாறன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், மாவட்ட, வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகிய அனைத்து அணிகளின் மாவட்ட, பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், சார்பு மன்றம், படிப்பகங்களை சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் முரசொலி மாறன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுபோல, தமிழகம் முழுவதும் நேற்று திமுகவினர் முரசொலி மாறனின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

* அமைச்சரவையே வியக்கிற அளவுக்கு பணியாற்றியவர்

அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முரசொலி மாறன் சிறந்த நிர்வாகியாக இருந்தார். திமுகவில் அறிவுஜீவிகளுடைய அணிக்கு தலைவராக இருந்தார். அவர் ஒன்றிய அமைச்சராக இருந்த போது, அமைச்சரவையே அவரை பார்த்து வியக்கிற அளவுக்கு பணியாற்றியவர். இயக்கத்தினர் படிக்க வேண்டும். புதிய சிந்தனையை தூண்ட வேண்டும் என்கிற எண்ணத்தை திமுகவில் விதைத்தவர் முரசொலி மாறன்’’ என்றார்.

Related Stories: