சாதி அடிப்படையில் பழிவாங்குவதாக புகார் தேசிய பேஷன் டெக்னாலஜி இயக்குனர் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: பேஷன் டெக்னாலஜி கல்வி நிலைய வளாக இயக்குனர் அனிதா மாபெல் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 2013ம் ஆண்டு முதல் நிர்வாகம் மற்றும் கொள்முதல் பிரிவில் மூத்த உதவி இயக்குனராக பணியாற்றியவர் இளஞ்செழியன். இவர் கட்டிடப்பிரிவு உதவி இயக்குனராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சாதி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தரமணி காவல் நிலையத்தில் இளஞ்செழியன் புகார் அளித்தார். அந்த புகாரின்அடிப்படையில் சென்னை நிப்ட் வளாக (தேசிய பேஷன் டெக்னாலஜி மையம்) இயக்குனர் அனிதா மாபெல் மனோகர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி அனிதா மாபெல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Related Stories: