மின்சார துறையில் முதற்கட்ட பணிகளை ரூ.2038 கோடியில் முடிக்க திட்டம்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: மின்சார துறையில் முதற்கட்ட பணிகளை ரூ.2038.79 கோடியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மின் கட்டமைப்பில் உள்ள 13.5 சதவீத லைன் லாசை (Line loss) குறைப்பதற்கு முதற்கட்டமாக இந்த வருடம் முதல், விவசாய மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ள 1686 பீடர்களில் 475 பீடர்களை விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட பீடர்களாக 1523.47 கோடி ரூபாய் செலவில் பிரித்தல், 273 பீடர்களில் உள்ள உயர் திறன் கொண்ட மின்மாற்றிகளை பிரித்து அதன் முதற்கட்டமாக 99 பீடர்களில் ரூ.534.86 கோடி செலவில் குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை அந்தந்த இடங்களில் நிறுவுதல், 13892 இடங்களில் உள்ள இரட்டை மின்மாற்றிகளில் முதற்கட்டமாக 3207 இடங்களில் உள்ள மின்மாற்றிகளை பிரித்து குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை ரூ.242.26 கோடி செலவில் நிறுவுதல், 532.08 கி.மீ. தூரத்திற்கு இருக்கக்கூடிய பழைய மின்கம்பிகளை முதற்கட்டமாக 206.50 கி.மீ. தூரத்திற்கு ரூ.15.41 கோடி ரூபாய் செலவில் புதிய மின்கம்பிகளாக மாற்றுதல் என மொத்தம் ரூ.2038.79 கோடி செலவில் இந்த பணிகள் வருகிற 31.3.2023க்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன. எதிர்வரும் மழைக்காலத்தில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும். அறுந்து கிடக்கும் கம்பிகளை கண்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

Related Stories: