அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதா தான். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மத்தை நம்பினேன், மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன், அதிமுக தொண்டர்களை நம்பினேன், உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன், இவையாவிற்கும் மேலாக, தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆசிகளை நம்பினேன். இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாகி இருக்கிறது.

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றைக்கும் ஜெயலலிதா தான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: