இலங்கையில் போர்க்கப்பல் நிறுத்த சீனா திட்டம் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் அம்பான்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக்கப்பல் யுவான் வாங் 5, இந்தியாவின் எந்தெந்த நிலைகளை உளவு பார்க்குமோ என்ற பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், இனிவரும் காலங்களில் தனது போர்க்கப்பல்களை தொடர்ந்து அம்மான்தோட்டை துறைமுகத்திற்கு அணிவகுக்கச் செய்ய சீனா தீர்மானித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டிலிருந்து இப்போது வரை சீனாவின் 53 உளவுக் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் வலம் வந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழகத்திலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு சீன போர்க்கப்பல்களும் வர தொடங்கினால் அது இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, தென்னிந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்காது என்பது கடந்த காலங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதால், அதை மனதில் வைத்து, இலங்கை குறித்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவு நிலைப்பாடுகளை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும்.

Related Stories: