தொழிலதிபர் போட்டு அழகுபார்த்த 550 சவரன் நகையை மாடல் அழகி பதுக்கினாரா? காவலில் எடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 சவரன் நகை திருடிய வழக்கில், தொழிலதிபர் மற்றும் மாடல் அழகியை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே மனைவி, தாய் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 சவரன் நகைகளை திருடி தனது காதலியும் மாடல் அழகியுமான ஸ்வாதி (22) என்ற பெண்ணுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து, சேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும், ஸ்வாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காகவும், இதன் பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கவும் இருவரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, நேற்று முன்தினம் ஸ்வாதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், சேகரை 3 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து ஸ்வாதியிடம் விசாரிக்கின்றனர். உண்மையிலேயே ஸ்வாதிக்கு 550 சவரன் நகைகளை சேகர் கொடுத்தாரா, அந்த நகைகளை ஸ்வாதி எங்கு பதுக்கி வைத்துள்ளார் அல்லது விற்பனை செய்துவிட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: