கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கிருஷ்ணாபுரம் பகுதியில் தடுப்பு  அணையைக் கட்டி, தமிழ்நாட்டிற்கு வரும் நீரை தடுத்துவிட்ட ஆந்திர மாநில அரசு, தற்போது மேலும் 2 தடுப்பு அணைகளைக் கட்டுவதற்கு திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறது. இந்த தடுப்பு அணைகள் கட்டப்படுமானால், தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர்கூட கிடைக்காது. இதனால் வேலூர், திருவள்ளூர் மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படும். ஆந்திர மாநிலம் கத்திரிப்பள்ளி என்ற இடத்திலும், நகரி மண்டலம் மொக்கலகண்டிகை என்ற இடத்திலும் கட்டப்பட உள்ளன. இந்த ஆற்றின் தண்ணீரை திருப்பிவிட மேலும் இரண்டு அணைகளை கட்ட ஆந்திர மாநிலம் முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆந்திர மாநில அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: