அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள் இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள். ஆனாலும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். 16வது சட்டப்பேரவையின் 11-5-2021 முதல் 26-8-2021 வரையிலான 14 நாட்களுக்கான பேரவை நடவடிக்கை குறிப்புகளின் பிடிஎப் வடிவங்கள் மற்றும் 2-8-2021ம் நாளன்று நடந்த சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவற்றை பொதுமக்களின் பார்வைக்காக பேரவை தலைவர் சட்டமன்ற பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வை சபாநாயகர் அப்பாவு நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் குடியரசு தலைவரால் 2021 ஆகஸ்ட் 2ம் தேதி சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நிறைவு விழாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கும் நிகழ்வும்  இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பிடிஎப் வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் (இபிஎஸ், ஓபிஎஸ்) இருவரின் கடிதமும் பார்த்தேன். அது அவர்களின் உள்கட்சி பிரச்னை. அவர்களே நீதிமன்றத்துக்கு சென்று இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்திற்கு சென்று இருக்கிறார்கள். அந்த முடிவு ஒரு பக்கம். சட்டப்பேரவையை பொறுத்த அளவில், ஜனநாயக மாண்புபடிதான் நடக்கும். இது அவசரமான முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்னை அல்ல, இது ஒரு கட்சியின் பிரச்னை. அதற்கு நல்ல முடிவுகள் வரும்.

சட்டமன்றத்திற்கு என்ன அதிகாரம் உண்டோ அதை பயன்படுத்தி, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை ஜனநாயக முறைப்படி நியாயமாக எடுப்போம். எந்த காலதாமதமும் இல்லாமல் யார் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், எப்படி சட்டமன்றத்தை வழி நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறாரோ அதன்படி ஜனநாயக முறைப்படி நடக்கும். அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள். அது பிரிந்ததற்கு யாரும் காரணம் அல்ல, அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னை. அதில் நாங்கள் யாரும் தலையிட்டு குளிர்காய விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார். அப்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய தகவல் தொடர்பு மைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: