இளைஞர்களின் வாழ்க்கையை சீரமைக்க தாம்பரம் காவல் துறையினர் சார்பில் போதை தடுப்பு மறுவாழ்வு திட்டம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு

சென்னை: இளைஞர்களின் வாழ்க்கையை சீரமைக்க போதை தடுப்பு மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தி அசத்தும் தாம்பரம் காவல் துறையினரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். தாம்பரம், பல்லாவரம், சேலையூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிரபலமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் படிக்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்குள்ள சமூக விரோத கும்பல்களால் கஞ்சா, ஹெராயின், அபின், வலிநிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்துவது குறித்து தாம்பரம் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் சில மாணவர்களே சக மாணவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்யும் நிலைமையும் ஏற்பட்டு வந்தது. இந்த தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி 99 வழக்குகளில் தொடர்புடைய 204 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 345 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞர்களை மீண்டும் போதை பொருட்களுக்கு அடிமையாகி கஞ்சா விற்பனையில் ஈடுபடாமல் இருக்கவும், போதை பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகளை தற்போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுரையின் பேரில் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழியும் இளைஞர்களை மீட்டெடுக்கும் மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சிறை சென்று ஜாமினில் வெளிவந்த 15 இளைஞர்களை நேரில் அழைத்து தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சுமார் 5 மணி நேரம் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாம்பரம் காவல் துறையினர் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வியை தொடரவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளையும் சொந்தமாக தொழில் செய்ய வங்கி கடன் பெறவும் ஏற்பாடு செய்ய உள்ளனர். இந்த ஏற்பாடுகள் அறிந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: