அமைச்சருடன் பேச்சுவார்த்தை காரணமாக இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைப்பு: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு

மதுரை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில், அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் நிர்வாக இணை ஆணையர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன்,  நிர்வாகிகளுடன் நேற்று சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை முடிவு குறித்து, நேற்று மதுரை திரும்பிய மாநிலத்தலைவர் முருகையன் அளித்த பேட்டி: வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து மிக விரிவாக பேசப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் உத்திரவாத அடிப்படையில் 18ம் தேதி (இன்று) நடக்கவிருந்த வெளிநடப்பு மற்றும் வட்டக்கிளை, மாவட்ட தலைநகர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மட்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

Related Stories: