2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் பாஜவை வீழ்த்த ஒன்றுபட வேண்டும்: டி.ராஜா வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: ஒன்றிய பாஜ அரசு மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. மாநில உரிமைகளை பறித்து வருகிறது. முஸ்லிம் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான அடக்குமுறை, கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் அரசியல், பொருளாதார நெருக்கடி என்றால், மற்றொருபுறம் சமூக ரீதியாக இந்தியாவில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.

பீகாரில் பாஜகவுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் வெளியேறியுள்ளார். இது பீகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024 தேர்தலில் இது பெரும் எழுச்சியை உருவாக்கும்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் மையமாக செயல்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஓரம்கட்டி விட்டு மேலிருந்து தன்னுடைய ஆதிக்கத்தை திணிக்க பாஜ முயற்சி செய்து வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அதிமுகவின் இரு பிரிவுகளும் யோசிக்க வேண்டும். ஆனால், இப்போது அதிமுக கொள்கை இல்லாத நிலையில் சீர்குலைந்து வருகிறது. அதனை பாஜ பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: