கோயில் திருப்பணிகளுக்கு ரூ.239 கோடி நிதி ஒதுக்கீடு: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ.239 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோயில் குளங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. குளங்களை மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு சிறப்பு பிளீடர் லிங்கதுரை ஆஜராகி, ‘‘ தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் திருப்பணிக்காக உயர்மட்ட குழுவின் பரிந்துரைப்படி ரூ.239 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோயில்களில் புனரமைப்பு பணி மற்றும் குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடியும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘ஒரே மனுவில் பல கோயில்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்காகத் தான் மக்கள் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்துள்ளனர். நீதிமன்றம் சுகாதாரப் பணியாளரைப் போல செயல்பட முடியாது’’ எனக் கூறி மனு மீதான விசாரணயை ஒரு மாதம் தள்ளி வைத்தனர்.

Related Stories: