இலங்கையில் சீன உளவு கப்பல் கீழக்கரை கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்

கீழக்கரை: சீன உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்ததையடுத்து கீழக்கரை கடற்கரையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இலங்கை வந்தடைந்தது. இதையடுத்து இந்தியாவில் பெரும்பான்மையான கடல் பகுதியை கொண்டுள்ள தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு வெகு அருகில் உள்ளது. எனவே ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்டவை மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழக்கரை கடற்கரையோர கலங்கரை விளக்கத்தில் அதிநவீன கண்காணிப்பு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் இலங்கை எல்லை வரை கண்காணிக்க முடியும். எனவே இங்கிருந்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்துள்ள சீன கப்பல் 2007ல் தயாரிக்கப்பட்டது. இந்த கப்பல், அது நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கிமீ தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும், பரந்த வான்வழி நோக்குடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இந்திய கடற்படை பலத்த கண்காணிப்பு பணிகளை முடுக்கி உள்ளது.

Related Stories: