டெல்லியில் ஜனாதிபதி, பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமருடன் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி-2022 சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடந்தது. இதில், 200 நாடுகளை சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. மேலும் ஜூலை 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளுக்கான துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், ”செஸ் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக சிறப்பாக செய்து முடித்து வரலாற்று நிகழ்வாக பதிவிட்டுள்ளார்’’ என வாழ்த்தி பேசினார்.

குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரை நேரில் சென்று அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அந்த பயணம் திடீரென ரத்தானது. இருப்பினும் முதல்வரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி விசாரித்த போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பிரதமரும் நிகழ்ச்சியில் பங்கேற்று விழாவை சிறப்பித்தார். மேலும் தமிழக முதல்வரின் பரிந்துரையின் அடிப்படையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்பிக்கள் அடங்கிய திமுக குழுவும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் அழைப்பிதழை முன்னதாக பிரதமரிடம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு ஒரு மணியளவில் சாணக்கியாபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அப்போது அவருக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கவுதம சிகாமணி, கனிமொழி, கல்யாண சுந்தரம், கிரிராஜன், அண்ணாதுரை, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து இரவு டெல்லி சாணக்கியாபுரி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 10.30 மணியளவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அவரை துணை ஜனாதிபதி ெஜகதீப் தன்கர் அவரது மாளிகையில் வாசல் வரை வந்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காலை 11.30 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்.

அதேபோன்று மரபு அரிசிகள், அருந்தானியங்கள் அடங்கிய பெட்டகம் மற்றும் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகம் ஆகியவற்றை ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார். தொடர்ந்து, தமிழக முதல்வருக்கு, ஜனாதிபதி முர்மு காலை சிற்றுண்டியை விருந்தாக அளித்தார். இதையடுத்து தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவுக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த சந்திப்பின்போது தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, நீட் தேர்வு விலக்கு, புதிய கல்வி கொள்கை, மின்சார மசோதா, காவிரி, மேகதாது, ஜி.எஸ்.டி நிலுவை தொகை, எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை குறித்து ஆலோசித்துள்ளார். இதையடுத்து மாலை 5.35 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணியளவில் சென்னை திரும்பினார்.

* ஜனாதிபதி திரவுபதி

முர்முவுக்கு மரபு அரிசிகள், அருந்தானியங்கள் அடங்கிய பெட்டகம் மற்றும் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

Related Stories: