ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

* எடப்பாடியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ரத்து

* ஓபிஎஸ் நீக்கத்துக்கு தடை

* இருவரும் சேர்ந்து மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்

சென்னை: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ரத்து செய்யப்படுவதாகவும், ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடை விதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும், ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டம் அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டதாக கூறி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி 2 வாரங்களில் விசாரித்து முடிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அர்விந்த் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி பிரகாஷ் ஆகியோரும், எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோரும் ஆஜராகினர். இரண்டு நாட்கள் நடந்த காரசார வாதத்திற்கு பிறகு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதன் அடிப்படையில் கட்சி விதிகள் சரியாக கடைபிடிக்கப்படாமல் நடத்தப்பட்ட ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்னை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், கட்சிக்கு தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை  ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்று கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மறுக்கக் கூடாது. ஒருவேளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் இடையில் எந்த காரணத்திற்காகவோ பிரச்னை ஏற்பட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமனமும், அவர் மூலம் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்ட வேலுமணி மற்றும் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது நியமனமும் செல்லாததாகிவிட்டது. பழைய நிலைமையே கட்சியில் தொடர்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடருவார்கள் என்பது உறுதியாகியுள்ளதாக மூத்த வக்கீல்கள் தெரிவித்தனர்.

* செல்லாத பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது.

* இரு தலைவர்கள் பிரச்னை உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், கட்சிக்கு தாங்க முடியாத இழப்பு  ஏற்பட்டுள்ளது.

Related Stories: