தி.மலை அருகே கொதிக்கும் எண்ணெய்யில் வெறுங்கைகளால் வடை சுட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வெறுங்கைகளால் வடை சுட்டு அம்மனுக்கு பெண் பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அடுத்த சே.அகரம் கிராமத்தில் அய்யனாரப்பன் கோயில் திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆடிமாத கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும். இந்த விழாவில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது அய்யனாரப்பனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்வதும், கொதிக்கும் எண்ணெய்யில் வடை சுட்டு படைப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய விழா ஒத்திவைக்கப்பட்டு இந்தாண்டு நடந்தது. கடந்த 14ம்தேதி தொடங்கிய விழாவில் நேற்று அலங்கரிக்கப்பட்ட பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பனுக்கு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள சந்தி அம்மன் கோயிலில் சு.பாப்பாம்பாடியை சேர்ந்த சந்தியம்மாள் எனும் பெண் பக்தர் கொதிக்கும் எண்ணெய்யில் வடையை சுட்டு வெறும் கைகளால் எடுத்து அம்மனுக்கு படையலிட்டார். இதற்காக, இவர் கடந்த 48 நாட்களாக விரதம் இருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Related Stories: