தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு-ஆவணம் மாயம்: ஊழியர்கள் 5 பேர் சஸ்பெண்ட்

தாம்பரம்: தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு உள்பட ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் ஊழியர்கள் ஐந்துபேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம், தர்காஸ் சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இங்கு தாம்பரம்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய பைக், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் கனரக வாகனங்கள் எப்.சி  செய்வதற்காகவும் வருகின்றது. இதுதவிர, பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுச் செல்லவும் வருகின்றனர். இதனால் மக்கள் கூட்டத்துடன் ஆர்டிஓ அலுவலகம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அலுவலகத்தில் இருந்த இருசக்கர வாகனங்களின் 37 ஸ்மார்ட் கார்டுகள் திடீரென மாயமானது. இதுகுறித்து புகார் எழுந்ததால் போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதில், அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலாஜி,  காளத்தி, உதவியாளர் சாந்தி, இளம் உதவியாளர் தாமோதிரன், அலுவலக  பி.ஏ.விஜயகுமார் உட்பட ஐந்து பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து ஏராளமான முக்கிய ஆவணங்கள் மாயமானதாக தெரிகிறது. இதையடுத்து ஊழியர்கள் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் வரை அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் தொலைந்துபோன ஸ்மார்ட் கார்டுகளை கண்டுபிடித்து  தர வேண்டும். இல்லையென்றால் மோசடியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: