எத்தியோப்பியாவில் இருந்து காலணியில் போதை பவுடர் கடத்தி வந்த பெண் கைது

மீனம்பாக்கம்: எத்தியோப்பியா நாட்டிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு ₹30 லட்சம் மதிப்புள்ள போதை பவுடரை காலணிக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர். எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் அதிகளவு போதைபொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து விமான பயணிகளை தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் தான்சானியாவை சேர்ந்த சுற்றுலா பயணி அஸ்சுரா முஹம்மத் சஃபானி (49) என்ற பெண்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த காலணிகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலணியை பிரித்து ஆய்வு செய்ததில், அங்கு ரகசிய அறைக்குள் ₹30 லட்சம் மதிப்பிலான 600 கிராம் மெத்தோ  குயிலோன் எனும் போதைபவுடரை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: