அக்னிபாத் ஆள் சேர்ப்பு முகாம்; நாகர்கோவிலில் மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணா ஸ்ேடடியம்: ராணுவ அதிகாரிகள் குமரி வருகை

நாகர்கோவில்: அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருப்பதையொட்டி, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மின்னொளி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல் உள்பட 16 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்காக நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் இந்த தேர்வில் கலந்து கொள்கிறார்கள். பகலில் பெருமளவில் இளைஞர்கள் திரண்டால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் இரவில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்காக அண்ணா விளையாட்டு அரங்கில் இரவை பகலாக்கும் வகையில் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அண்ணா விளையாட்டு அரங்கில் மட்டும் சுமார் 300 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ‘ஜெனரேட்டர்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆட்கள் தேர்வு நடைபெற்றாலும் பெயர் பதிவுகள் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.

இதற்காக அங்கு பிரமாண்ட ஷெட் போடப்பட்டுள்ளது. அங்கும் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் இதற்கான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடசேரி பஸ் நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தை திடலிலும் ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடசேரி ராஜேஷ் தியேட்டர் எதிரில் பெட்ரோல் பங்க் இருந்த பகுதி, அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல்குளம் அருகே உள்ள பகுதிகள், மாநகராட்சி புதிய கட்டிடம் அருகே உள்ள பகுதி ஆகிய இடங்களிலும் ஷெட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலைக்குள் தேர்வு முடிந்துவிடும்.

அக்னிபாத் ஆட்கள் தேர்வு நடைபெற இருப்பதையொட்டி ராணுவ அதிகாரிகள் நாகர்கோவில் வந்துள்ளனர். இவர்கள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் முகாமிட்டு, ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள். அண்ணா ஸ்டேடியம் தற்போது ராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து இருக்கிறது.

அண்ணா ஸ்டேடியத்துக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் நடைபயிற்சிக்காக  சிலர் வந்தனர். அவர்களை அனுமதித்த அதிகாரிகள், நாளை (18ம்தேதி) முதல் எந்த காரணத்தை கொண்டும் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றனர்.

விளையாட்டு போட்டிகள் அனைத்தும் கோணத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்துக்கு மாற்றப்படுகிறது. எனவே  ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் முடிவடையும் வரை, பொதுமக்கள் யாரும் அண்ணா ஸ்டேடியத்துக்கு வர வேண்டாம் என்றும், அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Related Stories: